திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ள வேண்டிய, நிலுவையில் உள்ள திட்டங்கள் பற்றி ஒரு கலந்துரையாடல் அவசியம் என்ற அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மதுரை மண்டல அதிகாரி திரு. கோவிந்தசாமி அவர்களை தனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்திற்கு துரை வைகோ எம்.பி. அழைத்திருந்தார். நேரில் வந்த அவருடன் பல்வேறு நிலுவையிலுள்ள திட்டங்கள் குறித்து ஆலோசித்தார்.
முக்கியமாக, தனது முயற்சியால் செயலாக்கம் பெறப்பட்டு வரும் G-Corner பகுதியில் உயர்மட்ட சுழற்பாலம் (Elevated Rotary) திட்டம், சஞ்சீவி நகர், ஸ்ரீரங்கம் Y-Junction, மாருதி நகர் ஆகிய இடங்களில் வாகன சுரங்கப்பாதைகள் (Vehicular Underpasses) மற்றும் மண்ணார்புரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து போக்குவரத்துக்கு வசதியான Bus Bay அமைப்புப் பணிகளை விரைவாக நிறைவேற்றிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
அடிக்கடி நடைபெறும் விபத்துகள் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்காக ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தார்.
பாலக்கரை முதல் தூவாக்குடி வரை (தேசிய நெடுஞ்சாலை-83) சாலையில் பெரும்பாலான விளக்குகள் எரியாத நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி, 75 விளக்குகள் அமைக்கப்பட்டு அவை சரியான படி எரிந்து வருவது குறித்தும், 3.6 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் அப்பணிகள் முடிவுற்று விளக்குகள் எரியும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.
பஞ்சப்பூரில் முன்மொழியப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் நிலை குறித்து கேட்டதற்கு, இத்திட்டம் முதன்மையாக எடுத்துக்கொண்டு உள்ளதாகவும், கூடியதோடு மார்ச் மாதம் அதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும் என்று பதிலளித்தார். திருச்சி - காரைக்குடி நான்கு வழிச்சாலைத் திட்டப் பணிகளையும், கருவேப்பிலான் கேட் (LC No: 372) மேம்பாலத்தின் திருப்பச் சாலைகளுக்கும் அமைக்கும் திட்டப் பணிகளையும் விரைவுபடுத்தி கேட்டிருந்தார். அது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரி உறுதியளித்தார்.

