மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கப் பிரிவான மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (MLF) சார்பில், தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்கள் 5,493 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிடவும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திடவும் வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி நாடாளுமன்ற தொகுதி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் 25.06.2026 அன்று மாபெரும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் சிறப்புரையாற்றிய துரை வைகோ எம்.பி. அவர்கள், "2019 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 15,106 பேரில், அதிமுக ஆட்சியில் 9,613 பேருக்கு 02.03.2021 அன்று பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், 5,493 தொழிலாளர்கள் இதுவரை விடுபட்டுள்ளனர். இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கவேண்டும் என எங்கள் தொழிற்சங்கம் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தலைவர் வைகோ அவர்கள் 30.08.2021 அன்றே அப்போதைய அரசுக்கு கடிதம் எழுதினார்" என்றார்.
"நான், கடந்த 12.04.2022 மற்றும் 28.12.2022 ஆகிய தேதிகளில் அன்றைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களை இருமுறை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு முறையாக நடத்தப்பட்டு பின்னரும் 5,493 பேர் விடுபட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்கள் மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளன" என்று விவரித்தார்.
இதனைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும், மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்களையும் சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும், குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் "இவர்களுக்குப் பணி வழங்கப்படும்" என்று உறுதியளித்ததாகவும் கூறினார்.
இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், "15 ஆயிரம் காலி இடங்களை நிரப்புவதோடு, விடுபட்ட 5,493 கேங்மேன் பணியாளர்களையும் சேர்த்து 20,493 நியமன ஆணைகளை விரைவில் வெளியிட முதல்வரின் ஒப்புதலைப் பெற்றுவிட்டோம். நிதித் துறையின் ஒப்புதலைப் பெற்றவுடன் அவர்களுக்குப் பணியாணை வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தி கேள்விப்பட்டவுடன், மின்சாரத்துறை அமைச்சருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக துரை வைகோ எம்.பி. உரையாற்றினார்.

