மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு, கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.ஆர்ஜினராஜ் அவர்கள் தலைமையில் 27.06.2026 சனிக்கிழமை சென்னை அண்ணா நகர், விஜயஸ்ரீ மகாலில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.
பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, புதூர் மு.பூமிநாதன், சு.ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானம் 19: சுற்றுச் சூழலுக்கும், விவசாயத்துக்கும், மீனவர்களுக்கும் பெரும் தீங்கினைச் செய்த ஸ்டெர்லைட் ஆலையை "பசுமைத் தாமிரம்" என்ற பெயரில் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கக் கூடாது என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 20: தமிழர்களின் பூர்வீக தாயகம் இலங்கைத் தீவு. தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உலகெங்கும் அதிகாரக வாழுகின்ற தமிழர்களை அந்தப் பொது வாக்கெடுப்பில் பங்கேற்கச் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம் 21: கடந்த பிப்ரவரி மாதம் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர், பாம்பன் மீனவர்கள் 12 பேர் என மொத்தம் 16 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அநுராதபுர சிறையில் அடைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட வேண்டிய மீனவர்கள் காணொளிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 22: தமிழகத்தில் தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை சிறு, குறு, பெரு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தொகையும், அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
தீர்மானம் 23: என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகள் விற்பனையை மத்திய அரசு கைவிட வேண்டும். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட்டில் நவரத்தினா பொதுத்துறை நிறுவனமாக விளங்கி ஆண்டுக்கு ரூ.3670 கோடி இலாபமீட்டும் நிறுவனமாகும். நிலக்கரி சுரங்கம் அமைக்கவும், அனல் மின் உற்பத்தி அமைவதிடத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடு, நிலங்களை இழக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பொதுக்குழு வலியுறுத்துகிறது.

