திருச்சி தொகுதியில், Young Indians (Trichy Chapter) மற்றும் தளிர் இணைந்து திருச்சி, எம்.எம்.நகர், சௌடாம்பிகா உலகப் பள்ளி (Sowdambikaa World School) அரங்கில் நடத்திய, பல்வேறு பள்ளிகளின் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்ற இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026 - திருச்சி அத்தியாயம் (Young Indians Parliament 2026 - Trichy Chapter) நிகழ்ச்சியை 28.06.2026 அன்று காலை 9:30 மணியளவில் தொடங்கி வைத்து துரை வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றினார்.
முதலில், மதிப்பிற்குரிய Young Indians அமைப்பின் நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அன்பு மாணவ, மாணவியர்களை வரவேற்றார். ஜனநாயகம், தலைமைத்துவம் மற்றும் பொதுச் சேவை குறித்த புரிதலை இளம் தலைமுறையில் ஏற்படுத்தும் இந்த சிறந்த முயற்சிக்காக Young Indians அமைப்பிற்கும் சௌடாம்பிகா உலகப் பள்ளிக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
"இன்று நீங்கள் ஒரு போட்டியில் பங்கேற்பவர்கள் மட்டுமல்ல; நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பை ஏற்று, சட்டங்கள் எவ்வாறு உருவாகின்றன, விவாதங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன, ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அனுபவிக்கப் போகிறீர்கள்" என்று மாணவ மாணவியரிடம் அவர்களின் இப்பங்களிப்பின் முக்கியத்துவத்தை குறித்து எடுத்துரைத்தார்.
"இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயகம் என்பது வாக்களிப்பது மட்டுமல்ல; மக்களின் கருத்துகளைக் கேட்பதும், மாறுபட்ட கருத்துகளை மதிப்பதும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், ஒவ்வொரு குடிமகனின் குரலும் மதிக்கப்படுவதை உறுதி செய்வதுமாகும். கடந்த 24 மாதங்களாக உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவத்தில், நாடாளுமன்றம் என்பது அரசியல் செய்வதற்கான இடம் மட்டுமல்ல; மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் உயரிய மேடை என்பதைதான் கற்றுணர்ந்தேன்" என்றார்.
அப்போது, அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தை சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். இறுதியாக, "அரசியலமைப்பைப் படியுங்கள். மாறுபட்ட கருத்துக்களை மதியுங்கள். ஆர்வத்துடன் கேள்வி கேளுங்கள். நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் வழி நடருங்கள். தலைமைத்துவம் என்பது அதிகாரத்தைப் பற்றியது அல்ல; பொறுப்பையும் பொதுச் சேவையையும் பற்றியது" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இன்றைய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாளைய பொறுப்புமிக்க தலைவர்களாக உயர வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்தினார். துரை வைகோ அவர்களின் உரைக்குப் பிறகு, மாணவர்கள் பலவகைப்பட்ட கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு அவர் விளக்கமாக பதிலளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

