தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் அவர்களின் அழைப்பின் பேரில், 25.06.2026 அன்று காலை 9:30 முதல் 11:30 வரை சுமார் இரண்டு மணி நேரம், மக்களின் நலன் கருதி கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று முக்கிய இடங்களில் துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
முதல் ஆய்வு — கோவில்பட்டி அரசு மருத்துவமனை: கோவில்பட்டியில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனையை விரிவாகப் பார்வையிட்டார். 413 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் கூடுதல் 50 படுக்கைகள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 25,000 சதுர அடியில் ஐந்து மாடி புதிய வளாகம் அமையவுள்ளதால், விரைவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் தன்னிறைவு பெற உள்ளது.
ஆனால் அங்கு பல முக்கிய குறைபாடுகள் உள்ளதை ஆய்வில் கண்டும் கேட்டும் அறிந்தார்: இதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் துறை மருத்துவர்கள் நிரந்தரமாக இல்லை; மாற்றுத்திறனாளர் மறுவாழ்வு மையத்தில் வாதநோய், விபத்தில் உறுப்புகள் இயலிழப்பு, தன்னிலை குன்றியவர்கள் (Autism) ஆகியோருக்கான பேச்சு சிகிச்சையாளர், occupational therapist நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்; சிறுநீரகச் சுத்திகரிப்புக்கான 8 கருவிகளில் 7 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன — கூடுதல் டயாலிசிஸ் கருவிகள் தேவை.
இரண்டாவது ஆய்வு — அரசு அலுவலக வளாகம் (வார்டு 21): துணை ஆட்சியர் அலுவலகம், BSNL, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், சிறைச் சாலை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வளாகத்திற்குள் உள்ள சாலைகள் 10 ஆண்டு காலுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளதையும் நேரில் கண்டார்.
மூன்றாவது ஆய்வு — 12 கிராமங்களை இணைக்கும் மந்திதோப்பு சாலை: கோவில்பட்டியைச் சுற்றியுள்ள 12 கிராமங்களை இணைக்கும் மந்திதோப்பு சாலை மிகவும் குறுகலாகவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றியும் உள்ளது. தாரமான சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்ற மக்களின் நியாயமான கோரிக்கையை நேரில் கேட்டறிந்தார்.
இந்த மூன்று ஆய்வுகளின்போதும் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் உடன் இருந்தார். பெறப்பட்ட கோரிக்கைகளை தனித் தனியாகத் தொகுத்து, பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகிய இரு அமைச்சர்களையும் சந்தித்து விரைவில் வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைக்க உள்ளதாக துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.

